ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கு எப்படி உதவும்?

நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தின் கணிப்பை முன்பிருந்த 6.1 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக இந்திய ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.

அதே போன்று, வியாழக்கிழமை நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டத்தில், வியப்பளிக்கும் வகையில், வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் அதே சமயத்தில், வளர்ச்சிக்கு உதவும் வகையில் தங்களது செயல்பாடு தொடர்வதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உதவும்? வல்லுநர்களின் கருத்துகளை காண்போம்.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, கடந்த ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் நாட்டின் வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்தது தெரியவந்தது. இது கடந்த ஆறாண்டுகளில் இல்லாத மிகப் பெரும் வீழ்ச்சி.

"ரிசர்வ் வங்கி 'பொறுத்திருந்து பார்ப்போம்' என்ற முடிவில் இருக்கிறது. ஒருவேளை வட்டி விகிதத்தை மென்மேலும் குறைந்திருந்தாலும், அது நாட்டின் வளர்ச்சிக்கு புத்துயிர் அளிப்பதில் பெரிய பங்களிப்பு செய்திருக்காது" என்று கூறுகிறார் கேர் ரேட்டிங்ஸ் எனும் நிதிசார் நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணரான மதன் சப்னாவில்.

பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்வதில் பணவியல் கொள்கைக்கு குறைந்தபட்ச பங்கே உள்ளதாக கூறுகிறார் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைமை பொருளாதார நிபுணர் அஜித் ரனாடே.

"ஏற்கனவே நான்கு முறை வட்டி விகிதம் குறைக்கப்பட்டுவிட்டதால், இனி நடப்பு நிதியாண்டில் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது" என்று அவர் கூறுகிறார்.

இதற்கு முன்பு நான்கு முறை ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைந்துள்ளது. எனினும், அதன் பலன் வங்கிகளின் மூலமாக நுகர்வோரை சென்றைடைவதற்கு நீண்டகாலம் ஆனது. உதாரணமாக, இந்தியாவின் மிகப் பெரிய வங்கியாக விளங்கும் பாரத ஸ்டேட் வங்கி, ரிசர்வ் வங்கி நான்குமுறை வட்டியை குறைத்த பின்பு, அதாவது கடந்த நவம்பர் மாதம்தான் முதல்முறையாக வட்டி விகிதத்தை குறைத்தது. இந்திய வங்கிகளின் இந்த வேகம், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைப்பதன் முழுப்பயனை நுகர்வோர் அடைவதற்கு போதாது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

"நாட்டின் வளர்ச்சியை உறுதிசெய்வதற்கு, மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் ஒருங்கிணைந்து செயல்படும்" என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகளில் ரியல் எஸ்டேட்டும் ஒன்று.

ரிசர்வ் வங்கி இந்த முறையும் வட்டி விகிதத்தை குறைத்திருந்தால், புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும், அதன் மூலம் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் அது உதவி இருக்கலாம் என்று கூறுகிறார் நைட் பிராங்க் இந்தியா நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஷிஷிர் பைஜால்.

ஆனால், வட்டி விகிதத்தை குறைப்பதே தீர்வு என்ற கருத்தை அனைவரும் ஆதரிக்கவில்லை.

"வீட்டுவசதி விற்பனையைத் தூண்டுவதற்கு வட்டி குறைப்பு மட்டும் போதுமானதாக இருக்காது. எனினும், குறைந்த வட்டி, தனிநபர்களின் வருமான வரிகளை குறைத்தல் போன்ற ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் மூலம் குடியிருப்பு விற்பனையை அதிகரித்திருக்கலாம் என்பதை மறுக்க முடியாது" என்று கூறுகிறார் அனுராக் எனும் தனியார் வீட்டுமனை ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் அனுஜ் பூரி.

நாட்டு மக்கள் எப்போது அதிக அளவு பணத்தை செலவிட ஆரம்பிக்கிறார்களோ அதுவே பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தொடக்கமாக இருக்கும்.

"நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு செல்வது மிகவும் மந்தமாகவே இருக்கும். முதலாவதாக, நுகர்வோர் பணத்தை செலவிடுவதற்கு அவர்களது கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். பிறகு, நாட்டின் ஊரக பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஆதரவு அளிக்க வேண்டும்" என்று கூறுகிறார் எஸ் பேங்கின் தலைமை பொருளாதார நிபுணர் ஷுபாண்தா ராவ்.

"வளர்ச்சியைப் புதுப்பிக்க மேஜிக் புல்லட் எதுவும் இல்லை. தற்போது நிதித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் முடியும் வரை, குறைந்த வளர்ச்சியுடன் இருக்க வேண்டும். அந்த செயல்பாடு முடிவடைந்ததும், பொருளாதார வளர்ச்சி இயல்பாக அதிகரிக்கும்" என்று கூறுகிறார் கிரிசில் நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணரான தர்மகீர்த்தி ஜோஷி.

"வரவிருக்கும் மத்திய நிதிநிலை அறிக்கையானது, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் மேலதிக நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சியில் அவற்றின் தாக்கம் குறித்து சிறந்த பார்வையை வழங்கும்" என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மேலும் கூறினார்.