`நாட்டின் கடைசி ராஜாவை கண்டுகொள்ளாத அரசு?!’ -வருந்தும் சிங்கம்பட்டி ஜமீன் உறவினர்கள்

`நாட்டின் கடைசி ராஜாவை கண்டுகொள்ளாத அரசு?!’ -வருந்தும் சிங்கம்பட்டி ஜமீன் உறவினர்கள்

சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி மறைவுக்கு, அரசு உரிய மரியாதை கொடுக்கவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அவருக்கு அரசு சார்பாக மணிமண்டபம் கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.  

தமிழகத்தின் பழைமையான ஜமீன்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீனின் 31-வது ராஜாவாகப் பட்டம் சூட்டப்பட்டவர், டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி. உடல் நலக்குறைவு காரணமாக, 89-வது வயதில் மறைந்தார். 

முருகதாஸ் தீர்த்தபதியின் இறுதிச் சடங்குகள் சிங்கம்பட்டி கிராமத்தில் நேற்று (26-ம் தேதி) முடிந்த பின்னர், அவரது உடல் தாமிரபரணிக் கரையில் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

நாட்டில் மன்னராட்சி முறை அமலில் இருந்தபோது ராஜாவாக முடிசூடிக் கொண்டவர்களில் கடைசியாக இருந்தவர், முருகதாஸ் தீர்த்தபதி. அவரது மறைவுக்கு தமிழக அரசு சார்பாக அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இருப்பினும், அவருடைய உடலுக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்துப் பேசியவர்கள், ”மேற்குத் தொடர்ச்சி மலையில் 74,000 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரராக அவர் இருந்திருக்கிறார்.

மன்னராட்சி முடிவுக்கு வந்ததுடன், நில உச்சவரம்புச் சட்டம் அமலுக்கு வந்தபோது, தன் நிலங்களை அரசிடம் ஒப்படைத்தவர். அரசு மருத்துவமனை, பள்ளிக்கூடம் ஆகியவை கட்டுவதற்குத் தாராளமாக நிலம் கொடுத்தவர். தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தில் தனக்குச் சொந்தமாக இருந்த 5,000 எக்கர் நிலத்தை, அதில் பயிரிட்டவர்களுக்கே வழங்கியவர். 

சிறந்த மொழிப் புலமையும் பல்வேறு சிறப்புகளும் கொண்ட அவருடைய உடலை அரசு மரியாதையுடன் தகனம் செய்திருக்க வேண்டும். இன்று, பலருக்கும் அரசு மரியாதை கொடுக்கப்படும் நிலையில், அவரை அரசு கண்டுகொள்ளாதது வேதனையளிக்கிறது” என்கிறார்கள்.

இது தொடர்பாகப் பல்வேறு அமைப்பினரும் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அதில், “நாட்டின் முதல் மன்னர் யாரென்பது யாருக்குமே தெரியாது. ஆனால், நாட்டில் கடைசியாக வாழ்ந்து மறைந்த மன்னர் முருகதாஸ் தீர்த்தபதி என்பது அனைவருக்கும் தெரியும். 

சிங்கம்பட்டி மக்கள்
நாட்டின் கடைசி ராஜாவாக வாழ்ந்து மறைந்த சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதிக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்.

பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரராகத் திகழும் சிங்கம்பட்டி ஜமீன் மறைந்து விட்டாலும், அவரை நினைவுகூரும் வகையில் அரசு சார்பாக நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.